சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி: உங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு விளக்கம்! - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Tuesday, 4 November 2025

சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணி: உங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு விளக்கம்!

samayam-tamil 
தமிழகம், கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர வாக்காளர்  திருத்தப்பணிக்கான அட்டவணையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார். அதன்படி வீடு, வீடாக வாக்காளர் கணக்கெடுப்பு படிவம் கொடுக்கும் பணி நவம்பர் 4-ந் தேதி தொடங்கி டிசம்பர் 4-ந் தேதி வரை நடக்கிறது. வரைவு வாக்காளர் பட்டியல், டிசம்பர் 6ந் தேதியும், இறுதி வாக்காளர் பட்டியல், பிப்ரவரி மாதம் 7-ந் தேதியும் வெளியிடப்படும்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், 'தினத் தந்தி'க்கு சிறப்பு பேட்டி அனித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு

கேள்வி:- சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணி எதற்கு செய்யப்படுகிறது?

பதில்: இரண்டு விஷயங்கள்தான்.

ஒன்று தகுதியான எந்த வாக்காளரும் பட்டியலிலிருந்து விடுபடக் கூடாது. இரண்டாவது தகுதியற்றவர்கள் யாரும் பட்டியலில் இருக்கக்கூடாது. தகுதியற்றவர்கள் என்றால் இறந்தவர்கள், நிரந்தரமாக தமிழகத்தை விட்டு வெளியே சென்றவர்கள். இரட்டை பதிவு இருப்பவர்கள்.

கேள்வி:- இந்த பணியின் தொடக்கம் என்ன?

பதில்:- சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப்பணிக்காக வாக்காளர் பெயர். வாக்காளர் அடையாள அட்டை எண், புகைப்படம் அச்சடிக்கப்பட்ட வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாக 4-ந் தேதி முதல் வந்து கொடுப்பார்கள். இதுதான் தொடக்கப் பணி. அந்த படிவத்தில் கேட்கப்பட்டு இருக்கும் தகவலை பொது மக்கள் நிரப்பி தரவேண்டும். அதனுடன் எந்த ஆவணமும் இணைத்து தர தேவையில்லை.

கேள்வி: அந்த படிவத்தில் என்ன கேட்கப்பட்டு இருக்கும்?

அந்த படிவம் தற்போதைய வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்கள் அடிப்படையில் வழங்கப்பட்டு இருக்கும். வாக்காளர் பெற்றோர் வாக்காளர் எண் ஆகியவற்றை நிரப்ப வேண்டும். தேவைப்படுபவர்கள் தங்களது புதிய புகைப்படத்தை ஒட்டி தரலாம்.

கேள்வி:- அந்த படிவத்தை பெறும் வாக்குச்சாவடி அலுவலர்கள் என்ன செய்வார்கள்?.

பதில்- அந்த படிவத்தை பெற்றுக் கொண்டு அதில் உள்ள தகவலை சரி பார்த்து, அதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ள செயலியில் அவர்கள் பதிவேற்றம் செய்வார்கள் எளிதாக இந்த பணியை செய்ய 'கியூ.ஆர். கோடு வசதியும் உள்ளது. அந்த வாக்காளரின் பெயர், அடையாள அட்டை எண் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு 2002 மற்றும் 2005 வாக்காளர் பட்டியலில் சரி பார்க்கப்படும். அந்தாண்டுகளுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்கள், தங்களது பெற்றோரின் வாக்காளர் பட்டியலின் எண் மூலம் ஆய்வு செய்து இணைக்கப்படும்.

கேள்வி: ஒருவேளை 2002, 2005 ஆண்டு பட்டியலில் அவர்கள் பெயர்கள் இல்லாவிட்டால் என்ன நடக்கும்?

பதில்: அவர்கள் பெயர் வேறு எந்த தொகுதியில் அதற்கு முன்பு இருந்தது என்பதை ஆய்வு செய்து, அதனுடன் ஒப்பிட்டு இணைக்கப்படும். ஒருவேளை அவர்கள் பெயர் இல்லாவிட்டால் அவர்களது பெற்றோர் அடையாள அட்டை, அவர்கள் வசித்த தொகுதி, அவர்களது வாக்காளர் அடையாள அட்டை எண் குறித்தும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். எதிலுமே அவர்கள் பெயர் இல்லாவிட்டால் வரைவு பட்டியலில் அவர்கள் பெயர் இடம் பெறாது. மீண்டும் அவர்கள் ஆவணங்களை கொடுத்து மனு செய்ய வேண்டும்.

கேள்வி:- கணக்கெடுப்பு படிவம் கொண்டு செல்லும் போது வீடு பூட்டப்பட்டு இருந்தால் என்ன நடக்கும்?. 

பதில்:- ஒவ்வொரு வீட்டுக்கும் 3 முறை அலுவலர்கள் வருவார் கள்.

கேள்வி:- வாக்காளர்கள் முகவரி மாறி இருந்தால் என்ன செய்வது? 

பதில்:- அதே பாகத்தில் மாறி இருந்தால் அவர்கள் அதிகாரியிடம் தெரிவிக்கலாம். தொகுதி மாறி இருந்தால் அவர்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. மீண்டும் ஆட்சேபனை காலமான டிசம்பர் 9-ந் தேதி முதல் ஜனவரிமாதம் 8-ந் தேதிக்குள் முகவரி மாற்றத்திற்கான மனு மற்றும் அதற்கான ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.

கேள்வி: பெற்றோர்கள் சொந்த ஊரில் இருப்பார்கள். பிள்ளைகள் நகரங்களில் பணியாற்றுவார்கள். ஆனால் சொந்த ஊரில்தான் வாக்காளர் அடையாள அட்டை எண் இருக்கும். அவர்கள் என்ன செய்ய வேண்டும்.?

பதில்:- அதில் எந்த பிரச்சினையும் இல்லை. வீட்டில் கொடுக்கப்படும். அந்த கணக்கெடுப்பு படிவத்தை பிள்ளைகளுக்கு பதில் அவர்கள் பெற்றாேர்களே பூர்த்தி செய்து கொடுத்தால் போதும். நகரத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் பிள்ளைகள் பெயர் இருக்கக்கூடாது. அப்படி இரட்டை பதிவு இருந்தால் ஒரு இடத்தில் மட்டுமே கணக்கெடுப்பு படிவத்தை கொடுக்க வேண்டும்.

கேள்வி- தகுதியுள்ள ஒரு வாக்காளரை பட்டியலில் இருந்து நீக்கிவிட முடியுமா?.

பதில்: இந்த வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியில் மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் இணைந்து பணியாற்ற உள்ளனர். தகுதியுள்ள எந்த வாக்காளர் பெயரையும் யாரும் நீக்க முடியாது. ஒருவர் பெயரை நீக்கினால் அதற்கான காரணம், இறப்பு அல்லது முகவரியில் இல்லை என்பதனை தெளிவாக சொல்ல வேண்டும். இந்த விவரங்கள் ஊர் பலகைகளில் மக்களுக்கு அறிவிக்கப்படும்.

கேள்வி:- இந்த பணி குறித்து மக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

பதில்: வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை மக்கள் பெற்றுக்கொண்டு அதனை நிரப்பி திருப்பித் தரவேண்டும். ஒருவேளை தராவிட்டால் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து அவர் முகவரி மாறப்பட்டது அதேபோல இருந்தாலும் அவர்கள் பெயரும் பட்டியலில் இடம் பெறாது. அவர்கள் அதற்கான காலத்தில் மனு கொடுத்து பட்டியலில் சேர்த்து கொள்ளலாம். தகுதியான யார் பெயரும் விடுபடாது. இவ்வாறு அவர் கூறினார்.

கேள்வி:- புதிய வாக்காளர்கள் இப்போது சேர முடியுமா? 

தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பதில்: கணக்கெடுப்பு படிவம் கொடுத்து பெறும் பணியின் போது 18 வயது ஆன புதிய வாக்காளர்கள் சேர்க்கை மட்டும் நடக்கும். அதற்காக வாக்காளர்கள் தங்கள் பெற்றோர் வாக்காளர் எண்ணை கொடுத்து உறுதிமொழி ஆவணம் மற்றும் படிவம்-6 கொடுத்தால் போதும். எந்த ஆவணமும் தர தேவையில்லை. ஆனால் இவர்கள் பெயர் வரைவு பட்டியலில் இடம் பெறாது. ஆட்சேபனை காலத்தில் இந்த படிவம் செய்யப்பட்டு தகுதி இருந்தால் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர முடியும்.

No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team