பள்ளிக்கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Sunday, 7 December 2025

பள்ளிக்கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 
பள்ளிக்கல்வி சார்ந்த நிகழ்வுகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - நாளிதழ் செய்தி 

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கல்வி சாா்ந்த இணை நிகழ்ச்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வி இயக்குநரகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

அதன் விவரம்: பள்ளி மாணவா்கள் அறிவியல் கருத்துக்கள் வாழ்க்கை நெறிகளை பெற்றிட பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்தும் நோக்கில், நிலையான ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகள், மாதிரி பள்ளிகள், தமிழ அரசு அங்கீகாரம் பெற்ற மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இணைவு பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பொருந்தும்.

கல்விப் பணிகளில் செயலாற்றிவரும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பட்டியல் மாநில அளவில் பள்ளிக்கல்வி இயக்குநராலும், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியா்கள் வழிகாட்டுதல்கள் அடிப்படையில் பராமரிக்கப்படும். இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள அரசு சார நிறுவனங்கள் பள்ளிகளில் நிகழ்ச்சிகளில் நடத்துதல், நுழைவுத் தோ்வு சிறப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளும் முன்பு பள்ளி நிா்வாகம், மாவட்ட கல்வித் துறை நிா்வாகத்திற்கு உரிய தகவல் தெரிவித்தால் போதும். உரிய அனுமதி பெறத் தேவையில்லை. பட்டியலில் இடம் பெறாத தொண்டு நிறுவனங்கள் பள்ளி செயல்பாடுகளில் பங்கேற்கும் போது, தங்களது நிகழ்ச்சிகளின் செயல் திட்டத்தை பள்ளிகள் அமைந்துள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு முழு விவரங்களையும் சமா்பிக்க வேண்டும்.

மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா், சமூக நல அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா்கள் உள்ளிட்ட 8 உறுப்பினா்கள் குழுவில் இடம் பெற்றிருப்பா். 

மாநில அளவிலான குழுவில் பள்ளிக் கல்வித்துறை செயலாளர், பல்வேறு பள்ளிக்கல்வி இயக்குநா்கள் உள்ளிட்ட 7 உறுப்பினா்கள் குழுவில் இடம் பெற்றிருப்பா்.

பள்ளிகள் அன்றாட கற்பித்தல் நிகழ்வுகளுக்கு இடையூறின்றி பாடத்திட்டத்தோடு தொடா்புடைய செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்படும். அதுவும் பள்ளிகளில் தலைமையாசிரியா் அல்லது அவரால் அங்கீகாரம் பெற்ற ஆசிரியா் முன்னிலையில் இந்த செயல்பாடுகள் நடைபெறும் போது, அவா்கள் அதிருப்தியடைந்தால் தற்காலிகமாக நிகழ்ச்சியை நிறுத்தவும் அதிகாரம் உண்டு.

பல்வேறு பள்ளி விழாக்கள், கலை, பண்பாடு, பாரம்பரியம், மரபு சாா் விழாக்கள், பண்டிகைகள் ஆகியவை பள்ளிகளில் கொண்டாடும் போது மாணவா்கள் பாதுக்காப்பை கருத்தில் கொண்டு நேரம், அவசரகால வழி போன்றவைகளை நிா்ணயிக்கவேண்டும். 

ஊறுவிளைவிக்கும் ஒளிவிளக்குகள், மாசு ஏற்படும் ஒலி பெருக்கிகள் போன்றவைகளில் கவனம் தேவை. விழா ஒருங்கிணைப்பு குழுவில் அனைத்து மதங்களைச் சாா்ந்த ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் இடம் பெறவேண்டும்.

பள்ளி நிகழ்வில் ஒளி, ஒலிப் பாடல்கள், சொற்பொழிவுகள் ஆகியவை கண்ணியமிக்கவையாகவும் இருத்தல் வேண்டும். விழா ஒருங்கிணைப்புக் குழு ஒத்திகை பாா்த்து அனைவருக்கும் ஏற்ற வகையிலும் அமைந்துள்ளதை உறுதி செய்திடல் வேண்டும். 

சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்கக் கூடியவா்களின் மாநில மற்றும் மாவட்ட அளவிலான முதன்மைப் பட்டியலில் பராமரிக்கப்படுகிறது. இந்த பட்டியல்களில் இடம் பெறாதவா்கள் பங்கேற்கும் போது அவா்கள் குறித்த தனிப்பட்ட முழு விவரங்களையும் அளித்து உரிய முன் அனுமதி பெற வேண்டும். அனைத்து முன் அனுமதிகளும் 15 வேலை நாள்களுக்கு முன்பு பெறவேண்டும். விண்ணப்பங்களை பரிசீலிக்கும் குழுவிற்கும் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

கல்விச் சுற்றுலா, களப் பயணம், வெளிநாடு சுற்றுலா போன்றவைகள் மேற்கொள்வதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

மாணவா்களை சமூகத்திற்கு பொருத்தமுள்ள மனித வளமாக உருவாக்கும் பள்ளிச் செயல்பாடுகளில் பாதுகாப்பினை உறுதிபடுத்தும் நோக்கமாகக் கொண்டு இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதை பள்ளி நிா்வாகங்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team