பள்ளித் தூய்மைப் பணியாளருக்கும் தற்காலிக SMC ஆசிரியர்களுக்கும் மாதந்தோறும் ஊதியம் வழங்கிடுக! - TRB TNPSC

TRB TNPSC 10TH 11TH 12TH TET PGTRB Study Materials Free Online Tests Available Here.

Monday, 24 November 2025

பள்ளித் தூய்மைப் பணியாளருக்கும் தற்காலிக SMC ஆசிரியர்களுக்கும் மாதந்தோறும் ஊதியம் வழங்கிடுக!

1001729842
தற்போது தமிழகத்தில் உள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்கு ஈடாக அல்லது அவற்றிற்கு மேலாக தற்காலிக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்கள் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

அதாவது துப்புரவு பணிக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கண்காணிப்பில் முறையே ₹1000, ₹1500 மாத ஊதியத்தில் தினசரி இரண்டு அல்லது மூன்று மணிநேரம் தற்காலிக துப்புரவு பணியாளர்களாக உள்ளூர் ஆள்கள் பணியமர்த்தப்பட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் பணிபுரிந்து மாணவர் கல்வி நலன் காத்து வருகின்றனர்.

அதுபோல, ஒரு நடுநிலைப்பள்ளியைத் தலைமையிடமாகக் கொண்டு அதனைச் சுற்றியுள்ள தொடக்கப் பள்ளிகளிலிருந்து பெறப்படும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் எனப்படும் எமிஸ் (EMIS) மற்றும் யுடைஸ் ப்ளஸ் (UDISE +) பணிகளை கெல்ட்ரான் (Keltron) மூலம் ஒப்பந்த சேவைப் பணி (Hiring for Contract Service) மேற்கொள்ளும் கணினிப் பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருவதும் எண்ணத்தக்கது. இவர்களுக்கான மாத ஊதியத்தைச் சம்பந்தப்பட்ட நிறுவனம் தொய்வின்றி வழங்கி வருவதாக அறியப்படுகிறது.

தவிர, பள்ளி வளாகத்திற்குள் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகள் (Kinder Garten Classes) பகுதிநேரமாகச் செயல்படுவதைக் கடந்த ஆட்சி முதற்கொண்டு தற்போது வரை உறுதிப்படுத்தி வருவது அறிந்து கொள்ளத்தக்கது. இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தற்காலிக பகுதிநேர ஊதியமாக மாதந்தோறும் ரூபாய் ஐந்தாயிரம் வழங்கப்பட்டு வருகிறது. 

அண்மைக்கால ஆளற்ற வகுப்பறையை நிரப்பும் வகையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு இணங்க அனைத்து வகைப் பள்ளிகளிலும் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தக்க கல்வித் தகுதியுள்ள தற்காலிக இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முறையே ₹12,000, ₹15,000 எனத் தொகுப்பூதியமாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் வழியாக உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலகம் மூலம் வழங்கப்படும் நடைமுறை இருந்து வருகிறது. இது மாதந்தோறும் நடைபெற்று வருகிறது என்று சொல்வதற்கில்லை. 

ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை என்பதற்கேற்ப மேற்குறிப்பிட்ட பகுதிநேர பள்ளித் தூய்மைப் பணியாளர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு முழுநேர தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியமும் தொகுப்பூதியமும் தொய்வின்றித் தொடர்ந்து வழங்கப்படும் நடைமுறையில் பல்வேறு தாமதம் இருப்பது வேதனைக்குரியது. நாளொன்றுக்குப் பள்ளித் தூய்மைப் பணியாளருக்கு வழங்கப்படுவது ரூபாய் ஐம்பது அல்லது அதற்கு குறைவான சொற்ப ஊதியமேயாகும். அவர்கள் வயல் சார்ந்த வேலைகள், காடு சார்ந்த மற்றும் கட்டிடங்கள் சார்ந்த பணிகளுக்குச் செல்கையில் அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் மிகுந்து காணப்படுவதைக் கணக்கில் கொள்வது நல்லது.

இதேதான் SMC தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கும் பொருந்தும். அவர்கள் இதைவிட அதிக ஊதியம் கிடைத்த வேலையினை விட்டுவிட்டு அதாவது அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக மாதக்கணக்கில் ஊதியம் கிடைக்கப் பெறாமல் கையறு நிலையில் இருப்பது என்பது சொல்லொணா துயரம் ஆகும். இதில் பலர் குடும்பம் சகிதமாக வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளி நிர்வாகத்திற்கும் மிகுந்த சங்கடங்களை இது உருவாக்கிவிடுகிறது. ஒருவரைப் பல நாள்கள் பட்டினிப் போட்டு என்றேனும் ஒரு நாள் பிரியாணி விருந்து வைப்பது என்பது சரியாகா.

ஆகவே, தமிழகத்தின் தாயுமானவராக விளங்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பள்ளியில் பணிபுரியும் பகுதிநேர தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக நியமனம் செய்யப்பட்ட தற்காலிக முழுநேர ஆசிரியர்களாக உழைத்துக் கொண்டிருக்கும் நபர்களுக்கு முடிந்தவரை மாதந்தோறும் அவர்களுக்குரிய ஊதியத்தை வழங்கி உதவிட தக்க ஆவன செய்ய வேண்டும் என்பது அந்த குரலற்றவர்களின் பணிவான வேண்டுகோள் ஆகும். பாவம் அவர்கள்! 

எழுத்தாளர் மணி கணேசன்

No comments:

Post a Comment

Hi Friends,

Now Your Comments Will Appear Instantly with out verification. So give lot of comments.Feel Free!

Thank You.

By - TrbTnpsc. Team